Remembering What was Lost in Mullivaaikkaal –
Part 3
முள்ளிவாய்க்காலில் இழந்தவைகளை நினைவுகூறல் –
பதிவு 3

The following reflection was transcribed verbatim from an interview conducted by Adayaalam.
அடையாளம் நடத்திய நேர்காணலில் இருந்து கீழ்வரும் பிரதிபலிப்பானது படியெடுக்கப்பட்டது

நான் இப்போது பத்தாம் வகுப்பில் படிக்கிறேன், விரைவில் உயர்தரம் செல்வேன். உயர்தரத்துக்குப் போகுமளவுக்கு பெறுபேறுகள் எடுத்தால் போதும் என்று நினைக்கிறேன். எனக்கு வரலாறு மிகவும் பிடித்த பாடம். நான் 2009 இல் எனது காலை இழக்கும் போது எனக்கு 4 வயது. இப்போது எனக்கு 15 வயது. எங்கள் தென்னந்தோட்டத்திலிருந்து இருந்து வரும் வருமானத்தில் தான் எனது கல்வியைத் தொடர்கிறேன்.

2009 ல் எங்களது வீட்டின் மேல் குண்டு விழுந்தது. அதில் எனது அப்பாவும் அம்மப்பாவும் இறந்து போனார்கள். அந்த வயதில் அது குண்டு என்றோ அல்லது அது என்ன செய்யும் என்றோ எனக்குத் தெரியாது. குண்டுச் சத்தங்கள் கேட்கத் தொடங்க நாங்கள் பங்கருக்குள் ஒளித்துக்கொண்டோம். பங்கருக்குள் தண்ணீர் நிறைந்ததால் மேலே மண்வெட்டி எடுக்கவென வெளியே போன போதுதான் அப்பாவும் அம்மப்பாவும் வீட்டின் மேல் விழுந்த குண்டில் இறந்து போனார்கள். எனது காலின் கீழ்ப்பகுதி துண்டிக்கப்பட்டு அதிக ரத்தம் வெளியேறியதால், எனக்கு என்ன நடந்தது என்று எதுவும் நினைவு இல்லை. நான் நினைவுக்கு வந்தபோது வவுனியாவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தேன், அங்கே தான் ஒரு காலை இழந்துவிட்டேன் என்பதையும் விளங்கிக் கொண்டேன். ஒரு காலில் நடப்பதோ அல்லது பொய்க்கால் போட்டு நடப்பதோ தொடக்கத்தில் மிகவும் கடினமாக இருந்தது. இப்போது கொஞ்சம் பழகிவிட்டது.

பொய்க்கால் பாவிக்கும் போது மிகவும் வசதியீனமாக இருந்தது. பொய்க்காலை மடிக்க முடியாது, காலை முழுதாக நீட்டியபடி தான் உட்கார முடியும். ஆரம்பத்தில் தகரக் கால் என்பதால் அதன் ஓரங்கள் காலில் வெட்டும், இப்போது பாவிக்கும் காலில் அந்தப் பிரச்சினை இல்லை. பாடசாலையில், நான் விழுந்துவிடுவேனோ என்ற பயத்திலேயே என்னை விளையாட்டுகளில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், ஆனால் எனக்கு கால் வலிக்கிறது அல்லது தூரம் நடக்க வேண்டும் என்று வந்தால், ஆசிரியர்களும் எனது நண்பர்களும் எப்போதும் உதவி செய்வார்கள், அதனால் எனக்கு தனிப்படுத்தப்படது போன்ற உணர்வு வருவதில்லை. எனது ஆசிரியரும் போரால் பலவற்றை இழந்தவர். அவரை நான் ஒரு முன்மாதிரியாகக் கருதுகிறேன். இந்தப் போர் எதற்கு நடந்தது அல்லது யார் நடத்தினார்கள் என்பது எனக்கும் இன்னும் தெளிவாக விளங்கவில்லை. ஆனால் எதுவுமறியாத வயதிலேயே நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

என்னால் மற்றவர்கள் போல் விளையாட முடியாவிட்டாலும், நின்று கொண்டு பங்குபற்றக்கூடிய விளையாட்டுக்களில் நான் பங்கு கொள்வேன். ஒருதடவை கொழும்பில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகளில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறேன். மாற்றுத்திறனாளிகளும் திறமை உடையவர்கள் என்பதை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. போக்குவரத்து இன்னும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது. பேருந்தில் எப்போதும் இடம் கிடைக்காது. இப்போதெல்லாம் இளம் ஆட்கள் எழுந்து இடம் தருவதில்லை, வயது போனவர்கள் தான் எழுந்து இடம் தருவார்கள். தூரம் போவதாக இருந்தால், முச்சக்கரவண்டி தான் பிடிக்க வேண்டும், ஆனால் அதற்கு அதிக செலவாகும். எனது பாடசாலையில் நான்தான் ஒரே ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் எனக்கு தனியாக ஒரு மேலைத்தேய கழிப்பறை கட்டிக் கொடுத்தார்கள் அதோடு நூலகமும் மேல்மாடியில் இருப்பதால், நான் பிடித்து ஏறுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள்.

இப்போதைக்கு எனது கனவு உயர்தரம் முடித்து ஒரு ஆசிரியராவது.

 

I am in grade 10 now. I want to score enough to be able to enter Advance Level soon. I love the subject history. I was four years old when I lost my leg, I am 15 years old now. My studies depend on the income we get from the coconut grove.

When our house was bombed in 2009, my father and my mother’s father were killed in it. I did not know what a bomb was or what it could do at that age. When we heard shelling, we all went to hide in a bunker but the bunker was filled with water, so my father went up to grab a spade. That is when a shell got dropped on to our house and my father and my grandfather got trapped and tragically died. My leg was cut off below my knee in that incident. I lost consciousness because I lost a lot of blood. I only remember waking up in Vavuniya getting treated. That is when I realised I did not have a leg anymore.

It was very difficult to walk with one leg or using an artificial leg. Now, it has became easier but it is very uncomfortable using the artificial leg. You cannot bend your knee with it, you can only sit with your leg fully stretched. I used a metal one before, so it scratched the edges of my flesh, but now I have a better one with sponge on the sides. At school, I am not included in games because everyone is afraid I might fall and hurt myself. However, if I feel pain in my legs, or if I have to walk a lot, my teachers and friends will always help me. Because of that, I do not feel like I am isolated. My teacher has also lost a lot to the war, I consider her a role model. I still do not fully understand who fought this war and for what reasons, but as innocent kids who do not know anything – we were victimised in this war.

I cannot play like others, but I can participate in some sports while standing. Once, I went to Colombo and participated in the Para-Olympics and won a silver medal. This was an opportunity to prove that disabled people are talented too. Transport is still an issue. If I take the bus, I do not always get seats. These days young people do not give up their seats for anyone, usually the older people give me their seats. If I have to travel far, we always have to take a three-wheeler, but it is expensive. I am the only disabled person in my school but the school still built me a western toilet with the help of an NGO. They also built a handle for me to hold on to when I walk upstairs, because the library is upstairs.

My dream is to become a teacher.